×

பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கல்

ராமநாதபுரம்,ஜன.5: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவியருக்கு காலாண்டு தேர்வு வரை முதல் பருவம், அரையாண்டு தேர்வு வரை இரண்டாம் பருவம், ஆண்டு இறுதி தேர்வு வரை மூன்றாம் பருவம் என மூன்று பருவ புத்தகங்கள் வழங்கப்படுகிறது.  இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து டிச.23 முதல் ஜன.1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து விடுமுறை முடிந்து ஜன.2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று முதல் ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் மண்டபம் கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 பருவத்திற்காக புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாவட்டத்தின் மாடல் பள்ளிகளான எமனேஸ்வரம், ரெகுநாதபுரம், திருப்பாலைக்குடி ஆகிய 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ,மாணவியருக்கு தொகுதி 1 மற்றும் தொகுதி 2 என தலா 10 செட் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதுபோன்று 3 கல்வி மாவட்டங்களிலும் தமிழ் வழி கல்வியில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 9ஆயிரத்து 344 செட் புத்தகங்களும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு 1,123 செட் புத்தகங்களும் வழங்கப்பட்டது. 7ம் வகுப்பில் தமிழ் வழியில் படிக்கும் மாணவ,மாணவியருக்கு 10ஆயிரத்து 680 செட் புத்தகங்களும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவ,மாணவியருக்கு 1,435 செட் புத்தகங்களும் வழங்கப்பட்டது.

மேலும் 8 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவியர் 2 லட்சத்து 17 ஆயிரத்து 450 பேருக்கு 80 பக்கம் நோட்டுகளும். 68 பேருக்கு 40 பக்கம் நோட்டுகளும் வழங்கப்பட்டது. இதனை அந்தந்த பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் முன்னிலையில் மாணவ,மாணவியருக்கு வகுப்பாசிரியர்கள் வழங்கினர்.

The post பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்